×

பாகிஸ்தானில் மர்ம நபர்கள் கைவரிசை இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதி தாவூத் கொலை: அந்நிய மண்ணில் தொடரும் களையெடுப்பு

இஸ்லாமாபாத்: இந்தியா நடத்திய பாலகோட் வான்வழி தாக்குதலில் உயிர் தப்பியவரும், மசூத் அசாரின் வலதுகரமுமான லஷ்கர் இ ஜப்பார் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் தாவூத் மாலிக் பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தியாவில் மிகவும் தேடப்பட்டு வரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளில் குறிப்பிடத்தக்கவர் மசூத் அசார். ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் நிறுவனரான இவர் 2019ல் புல்வாமா தாக்குதல் உட்பட இந்தியா மீது பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பானவர். சர்வதேச தீவிரவாதியான மசூத் அசாரின் வலதுகரமாக இருந்தவர் தாவூத் மாலிக். இவர் லஷ்கர் இ ஜப்பார் தீவிரவாத அமைப்பின் நிறுவனர்.

ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ ஜாங்வி போன்ற பல தீவிரவாத அமைப்புகள் நடத்திய நாசவேலைகளில் தொடர்புடையவர் தாவூத் மாலிக். இவரும் இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவர். புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாலகோட்டில் இந்தியா நடத்திய வான்வழி தாக்குதலில் தாவூத் மாலிக் நூலிழையில் உயிர் தப்பியவர். இந்நிலையில், பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானின் மிராலி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் தீவிரவாதி தாவூத் மாலிக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கிளினிக் ஒன்றில் தாவூத் மாலிக் சிகிச்சை பெற்று வந்த போது, மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொன்று விட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என போலீசார் தெரிவித்துள்ளனர். மாலிக்கின் மரணம், இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளில் ஈடுபடும் தீவிரவாதிகளின் கொலைப் பட்டியலில் 17வது தீவிரவாதி தாவூத் மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது.

* இதுவரை இவர்கள்…

சமீபத்தில் கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மற்றும் சுக்தூல் சிங் என்கிற சுகா துனேகே ஆகியோர் மர்ம நபர்களால் பொது இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவரை கொலையாளிகள் யாரும் சிக்கவில்லை. இந்திய எதிர்ப்பு தீவிரவாதிகளின் மர்ம கொலை கடந்த ஆண்டு தொடங்கியது. கடந்த 1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்திய தீவிரவாதிகளில் ஒருவரான ஜாகூர் மிஸ்திரி கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பிறகு, 300 பேர் பலியான ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பு தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்ட கனடாவைச் சேர்ந்த தீவிரவாதி ரிபுதாமன் சிங் மாலிக் 2022 ஜூலையில் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

The post பாகிஸ்தானில் மர்ம நபர்கள் கைவரிசை இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதி தாவூத் கொலை: அந்நிய மண்ணில் தொடரும் களையெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Dawood ,Pakistan ,Islamabad ,Lashkar-e-Jabbar ,Masood Azhar ,Balakot ,India ,
× RELATED அதிக வரி, போலீஸ் அடக்குமுறை எதிர்த்து...